Monday, July 07, 2014

மிளகைத் தேடி இந்தியாவுக்கு கடல் வழியை கண்டுபிடித்தார்கள்
















சூப் தயாரிப்பதற்கு மிளகு எங்கே கிடைக்கும் என்று தேடி நம் நாட்டிற்குள் வந்தவர்கள் தான் இந்தியாவையே 350 ஆண்டுகள் ஆண்ட கிழக்கிந்தியக் கம்பெனியினர். அவர்கள் மிளகு வணிகத்திற்காக  மலபார் பகுதிகளில்  போர் நடத்திய போது அவர்களை தீவிரமாக எதிர்த்த மலபார்-கோட்டயத்தின் சிற்றரசரான  கேரளவர்மா பழசி ராஜா,  தனது  நாட்டில் பயிரிடப்பட்டிருந்த மிளகு கொடிகளை வெட்டி எரித்து விடுவேன் என்று மிரட்டினார். ஒரு கைப்பிடி மிளகு வாங்குவதற்காக தங்கத்தையே அள்ளித்தந்தவர்கள் ஐரோப்பியர்கள். அப்படிப்பட்ட பாரம்பர்யமிக்க, கறுப்புத் தங்கம் என்றழைக்கப்பட்ட மிளகை தனியாக எடுத்து வைத்துவிட்டு நாம் வெண்பொங்கல் சாப்பிடுகிறோமே... இது சரியா ???


பொங்கலில் தட்டுப்படும் மிளகைத் தவிர்ப்பது சரியோ அல்லது தவறோ அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.  ஆனால்,  இந்த மிளகின் வரலாறு பூமியில் தவிர்க்கமுடியாத ஒன்று.  மிக நீண்ட நெடிய பயணம் கொண்டது.  கருப்பாக கையில்   உருண்டோடும் இந்த சின்னஞ்சிறு  பண்டம் உலகையே தன்னைச் சுற்றி உருண்டோட வைத்துள்ளது. இந்த  நூற்றாண்டில் பெட்ரோலியத்தைப் போல, கடந்த காலத்தில் உலக வரலாற்றையே மாற்றிய பண்டம் இது.  மிளகு இந்தியாவிற்கு வந்த அராபிய வணிகர்களால் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இங்கிருந்து வாங்கிச் செல்லப் பட்டு ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டுக் கொண்டிருந்தது.  அப்பொழுதெல்லாம்  உணவில்  காரம் சேர்க்கவேண்டுமானால்,  மிளகு என்கிற ஒரே ஒரு பண்டத்தின் மூலம் தான் இயலும்.  அந்தக் காலத்தில் மிளகாய் என்ற படு காரமான பச்சை  நிறத்திலுள்ள ஒரு காய்கறியைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. தென் அமெரிக்கா தான் இந்த மிளகாயின் பூர்வீகம். போர்த்துகீசியர்கள் தென் அமெரிக்காவைக் கைப்பற்றி அங்கே ஒரு காய் மிளகைப் போலக் காரமாக இருக்கிறது என்று தற்செயலாக கண்டறிந்து அதற்கு மிளகாய் எனப் பெயர் சூட்டி சந்தைப் படுத்தும் வரை நம் நாட்டில் காரத்திற்கு  பயன்படுத்துவது மிளகுதான்.


ஆரம்ப காலத்தில் போர்த்துகீசியர்கள், டச்சுகாரர்கள், டேனிஷ் காரரர்கள்தான் கடல் பயணங்களை மிகவும் துணிகரமாக நடத்துபவர்களாக இருந்தனர். அப்போதெல்லாம், கடல் பயணம் மிகவும் ஆபத்தானது.  பயணத்தின் போது 10 பேரில் 8 பேர் இறந்து விடுவார்கள்  அல்லது நோய்வாய்ப் பட்டுவிடுவர்.  மிளகு வணிகத்தில் ஈடுபட்ட அரேபியர்களின் முறையற்ற வணிகத்தினால் பாதுக்கப்பட்ட ஐரோப்பியர்கள்,  உயிரைப் பணயம்  வைத்து  ஒரு வழியாக இந்தியாவுக்கு கடல் வழியை  கண்டுபிடித்தார்கள்.  அதனால்,  அராபியர்கள் வசம் ஏகபோகமாக இருந்த மிளகு வணிகம், கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு வழி கண்டுபிடிக்க முனைந்து வெற்றி கண்ட ஐரோப்பியர் வசம் வந்தது.   டச்சுக்காரர்களிடம் இருந்து தான் இங்கிலாந்து மிளகு மற்றும் கிராம்பு ஆகிய நறுமண சரக்குளை வாங்கி வந்துள்ளது.   ஒரு கட்டத்தில் டச்சுக்காரர்கள் மிளகின் விலையை ஏற்றிவிட்டனர். மேலும் தரம் குறைந்த மிளகையே இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.  


இதனால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கடலோடிக் குழு ஒன்று இங்கிலாந்து ராணியிடம் உரிமம் கோரி,  இந்தியா நோக்கி பயணித்தது.  அதுதான் முதன் முதலாக இங்கிலாந்து இந்தியாவில் காலடி பதிக்கக் காரணம். அப்போது இந்தியாவை ஆண்ட முகலாய  மன்னர் ஜஹாங்கிர் அவர்களுக்கு வியாபார உரிமம் வழங்கினார். மிளகு வியாபாரத்துக்காக இங்கே வந்த பிரிட்டிஷ்காரர்கள் அதன் பிறகு, படிப்படியாக பல சூழ்ச்சிகளின் மூலம் இந்தியாவை அடிமைப்படுத்தி சில நூற்றாண்டுகள் வரை ஆண்டதும், இங்கிருந்து மிளகை கப்பல்களில் கொண்டு சென்று ஐரோப்பிய சந்தைகளில் விற்று  பணம் சம்பாதித்ததும் யாவரும் அறிந்ததே !!!

0 comments:

Post a Comment